Skip to main content

கேரளாவில் இன்று 94 பேருக்கு கொரோனா தொற்று, 3 பேர் பலி: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

 

திருவனந்தபுரம்,

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 47 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 37 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.  கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்த 7 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், 8 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், 3 பேர் டெல்லியில் இருந்தும், 2 பேர் குஜராத்தில் இருந்தும், ஒருவர் ராஜஸ்தானில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று 39 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 13 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 8 பேர் மலப்புரம் மாவட்டத்தையும்,  7 பேர் கண்ணூர் மாவட்டத்தையும்,  5 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும்,  தலா 2 பேர் வயநாடு மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும் தலா ஒருவர் பத்தனம்திட்டா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 12 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 11 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 10 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 8 பேர் ஆலப்புழா மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களையும், 7 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 6 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 5 பேர் கோட்டயம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 2 பேர் வயநாடு மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் இன்று கொரோனாவுக்கு 3 பேர் மரணமடைந்துள்ளனர். சென்னையிலிருந்து பாலக்காடு வந்த மீனாட்சி அம்மாள், அபுதாபியிலிருந்து மலப்புரம் அந்த ஷப்னாஸ், கொல்லம் மாவட்டம் காவநாடு பகுதியை சேர்ந்த சேவியர் ஆகிய மூன்று பேர் இறந்தனர். இவர்களில் ஷப்னாஸ் ரத்த புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். கொல்லத்தை சேர்ந்த சேவியர் இறந்த பின்னர்தான் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவில் கொரோனா பாதித்து மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3,787 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை கேரளாவில்  1,588 பேருக்கு கொரோனா நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 884 மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களிலாக 1,70,065 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்கள் 1,68,578 பேர் வீடுகளிலும், 1487 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இதுவரை 76,383 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 72,139 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 18,146 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 15,264 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. இதுவரை கேரளாவில் 99,922 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தற்போது நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 124ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா அறிகுறிகளுடன் 225 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தொடர்ந்து  மத்திய அரசு ஆட்கள் அதிக அளவில் கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூன் 8ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடர்பாக இன்று பல்வேறு மதத் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் நிபந்தனையுடன் வழிபாட்டுத் தலங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்படும். மத்திய அரசின் அறிவுரையின்படி வழிபாட்டுத்தலங்கள் திறப்பது குறித்து தீர்மானிக்கப்படும். மலப்புரத்தில் அன்னாசிப்பழத்தில் வெடிபொருள் வைத்து யானையை கொன்ற சம்பவம் தொடர்பாக போலீஸ் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 3 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப் படுத்தப் பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேரளா மீது சிலர் உண்மைக்கு மாறான தகவல்களை கூறி அவதூறு பரப்புகின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

date