Skip to main content

கேரளாவில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று: கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல் 

திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் காசர்கோடு மாவட்டத்தையும்,  10 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 5 பேர் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 3 பேர் பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், தலா 2 பேர் கொல்லம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 25 பேர் வெளிமாநிலங்களில் (மகாராஷ்டிரா 17, தமிழ்நாடு 4, டெல்லி 2, கர்நாடகா 2) இருந்து வந்தவர்கள் ஆவர்.  

கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தததின் மூலம் 6 பேருக்கு நோய் பரவியுள்ளது. இவர்களில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 2 ரிமாண்ட் கைதிகளும், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு சுகாதாரத்துறை ஊழியரும் உள்ளனர். இன்று 12 பேர் நோயிலிருந்து குணமாகி உள்ளனர். இவர்களில் 6 பேர் காசர்கோடு மாவட்டத்தையும்,  2 பேர் கொல்லம் மாவட்டத்தையும்,  தலா ஒருவர் வயநாடு, மலப்புரம், இடுக்கி, மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து இதுவரை கேரளாவில் நோயிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை  532 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 359 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் எண்ணிக்கை 97,247 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து விமானங்கள் மூலம் 8,390 பேரும், கப்பல் மூலம் 1,621  பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 82,678 பேரும், ரயில்கள் மூலம் 4558 பேரும் வந்துள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக தற்போது 99, 278 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 98,486 பேர் வீடுகளிலும்,  792 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 152 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1861 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 54,899 பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 53,704 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இது மட்டுமில்லாமல் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 8110 பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 7,994 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பினராய், பாலக்காடு மாவட்டத்திலுள்ள புதுசேரி, மலம்புழா மற்றும் சாலிசேரி ஆகிய 4 இடங்கள் ஹாட்ஸ்பாட் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  இதையடுத்து தற்போது கேரளாவில் ஹாட் ஸ்பாட் பகுதிகளின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

date