Skip to main content

கேரளாவில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 82 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 19 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். ஒரு பெண் டாக்டர் உள்பட சுகாதாரத்துறையை சேர்ந்த 5 ஊழியர்களுக்கு இன்று நோய் பரவியுள்ளது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 5 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 14 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும்,  11 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 9 பேர் இடுக்கி மாவட்டத்தையும்,  8 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 7 பேர் கோழிக்கோடு மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும்,  தலா 5 பேர் கொல்லம், எர்ணாகுளம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 3 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், தலா 2 பேர் கண்ணூர் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று ஒரே நாளில் 4000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை கேரளாவில் 1,494 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 832 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 160,304 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,58,864 பேர் வீடுகளிலும், 1,440 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 241 பேர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 73, 712 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 69,606 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 16,711 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 15264 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் 128 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. வந்தே பாரத் திட்டத்தின்படி கேரளாவுக்கு எத்தனை விமானங்களை வேண்டுமானாலும் அனுப்பி வைக்கலாம் என்று மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜூன் 2ம் தேதி வரை 140 விமானங்களில் இதுவரை 24,333 பேர் வந்துள்ளனர். 3 கப்பல்கள் மூலம் 1,488 பேர் என மொத்தம் இதுவரை வெளிநாடுகளில் இருந்து 25, 821 பேர் வந்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து கேரளா வர எந்த விமானத்திற்கும் தடை விதிக்கவில்லை. கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பிளஸ் 1 நீங்கலாக 41 லட்சம் மாணவர்கள் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் வகுப்புகள் தொடங்க இயலாததால் கடந்த 1ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனாலும் 261 ,784 மாணவர்களுக்கு ஆன்லைன் வசதி இல்லை என தெரிய வந்துள்ளது. இவர்களுக்கு உரிய மாற்று ஏற்பாடு செய்யப்படும். ஆன்லைன் வகுப்பு நடத்திய ஆசிரியைகளுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாலக்காடு அருகே யானையைக் கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி முதல் 52 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

date