Skip to main content

கேரளாவில் இன்று 141 பேருக்கு கொரோனா தொற்று, மருத்துவமனையில் 1,620 பேர் சிகிச்சை: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

 

திருவனந்தபுரம்,

கேரள முதல்வர் பினராய் விஜயன்  செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் தற்போது கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று 141 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 19ம் தேதி 118 பேருக்கும், 20 ம் தேதி 127 பேருக்கும், 21ம் தேதி 133 பேருக்கும், நேற்று 138 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டது . கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இன்று ஒருவர் மரணமடைந்துள்ளார். கொல்லம் மாவட்டம் மையநாடு பகுதியை சேர்ந்த  வசந்தகுமார் என்பவர் டெல்லியில் இருந்து கடந்த மாதம் ஊருக்கு வந்திருந்தார். கொரோனா அறிகுறிகளுடன் கடந்த சில தினங்களுக்கு முன் கொல்லம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உயிரை காப்பாற்ற முடியவில்லை. இவரது மறைவுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கேரளாவில் நோய் அறிகுறி இல்லாமல் பலருக்கு நோய் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதேபோல எங்கிருந்து நோய் பரவியது என்ற கண்டுபிடிக்கமுடியாதவர்களும் உள்ளனர். இன்று 60 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 79 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 52 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் 9 பேருக்கு நோய் பரவியுள்ளது. ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கும் இன்று நோய் பரவி உள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில்  16 பேர் டெல்லியில் இருந்தும், 14 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், 9 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தும், தலா 2  பேர் மேற்குவங்காளம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா, அரியானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களையும், தலா ஒருவர் மத்திய பிரதேசம், மேகாலயா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் தலா 27 பேர் பத்தனம்திட்டா மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும்,  19 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 14 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 13 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும்,  11 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 8 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 6 பேர் கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும்,  தலா 4 பேர் திருவனந்தபுரம் மற்றும் கொல்லம் ஆகிய மாவட்டங்களையும், 2 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 60 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 15 பேர் மலப்புரம் மாவட்டத்தையும்,  12 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 10 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 6 பேர் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா  ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா  3 பேர் திருவனந்தபுரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று   4,473 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.  இதுவரை கேரளாவில் 3,451 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 1,620 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 1,50,196 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2206 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். இதுவரை 1,44,649 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 3,661 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இன்று 275 பேர் நோய் அறிகுறிகளுடன் பல்வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் உள்பட சமூக நெருக்கமுள்ள 39, 518 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 38, 551 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. தற்போது கேரளாவில் 111 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. கேரளாவில் 9 மாவட்டங்களில் 100 க்கும் அதிகமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் அதிகமாக மலப்புரம் மாவட்டத்தில் 201 பேரும், பாலக்காடு மாவட்டத்தில் 154 பேரும், கொல்லம் மாவட்டத்தில் 150 பேரும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 127 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் 126 பேரும், கண்ணூர் மாவட்டத்தில் 120 பேரும், திருச்சூர் மாவட்டத்தில் 113 பேரும்,  கோழிக்கோடு மாவட்டத்தில் 107 பேரும், காசர்கோடு மாவட்டத்தில் 102 பேரும் உள்ளனர். மே 4ம் தேதிக்கு பிறகு நோய் உறுதி செய்யப்பட்ட 2,811 பேரில் 2,545 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். நோய் அறிகுறி இல்லாமல் பலரிடம் நோய் பரவுவது தெரிய வந்துள்ளது. அதில் யாரும் கவலைப்படத் தேவையில்லை. உலகின் பல பகுதிகளில் 60 சதவீதம் பேருக்கும் இதே போல நோய் அறிகுறி இல்லாமல் தான் பரவி உள்ளது. 20 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே நோய் அறிகுறி காணப்பட்டுள்ளன. அதிக அளவில் நோய் அறிகுறி காணப்படுபவர்கள் மீதமுள்ள 20 சதவீதம் பேர்  மட்டுமே. அதில் 5 சதவீதம் பேர் மட்டுமே அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கடைப்பிடிப்பது போல வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் உள்ள வீடுகளில் இருப்பவர்கள் வீடுகளிலும் இதே போல முகக்கவசம் மற்றும் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். திருவனந்தபுரம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவுவது அதிகரித்து உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் கடும் நிபந்தனைகளை ஏற்படுத்த வேண்டிய நிலை உள்ளது . ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால் பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. திருவனந்தபுரத்தில் அரசு அலுவலங்கள் அதிகமாக இருப்பதால் அங்கு மக்கள் அதிக அளவில் பொது இடங்களில் நடமாடி வருகின்றனர். எனவே கிராம நிர்வாக அலுவலகங்கள் முதல் தலைமைச் செயலகம் வரை உள்ள அரசு அலுவலங்களில் பொதுமக்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்கப்படும். ஊரடங்கு சட்டம் அமலில் இருந்தபோது கேரளாவில் ரேசன் கடைகள் மூலம் அனைவருக்கும் இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. அங்கன்வாடியில் படிக்கும்  குழந்தைகளின் வீடுகளுக்கே உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை அவர்களது வீடுகளுக்கே சென்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அரிசி தவிர  துவரம் பருப்பு, உப்பு, ஆட்டா உள்பட 9 வகையான மளிகைப் பொருட்கள் அவர்களது வீடுகளில் வழங்கப்படும். இதற்காக அரசு 81.37 கோடி ஒதுக்கி உள்ளது. ஆன்லைனில் படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு இதுவரை 1,311 டிவிக்களும், 123 ஸ்மார்ட் போன்களும், 41 லேப்டாப்புகளும், 146 கேபிள் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

date