கேரளாவில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 27 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 26 பேருக்கும், பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த 13 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 9 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தை சேர்ந்த 7 பேருக்கும், பாலக்காடு மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 6 பேருக்கும், திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 3 பேருக்கும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 71 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 28 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர்.
கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் இன்று 8 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று 41 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 803 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1095 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,91,481 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,89,765 பேர் வீடுகளிலும், 1,716 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 277 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 4, 316 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 83, 875 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 79,957 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது.
மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 22,324 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 20,362 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. 5,731 மறு பரிசோதனை உள்பட இதுவரை 1, 11,930 உமிழ்நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கேரளாவில் தற்போது 144 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Log in to post comments