Skip to main content

கேரளாவில் இன்று 272 பேருக்கு கொரோனா தொற்று, 111 பேர் குணமடைந்தனர்: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி

திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் செவ்வாய்க் கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 272 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 111 பேர் குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 157 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 38 பேர் வெளி மாநிலத்தில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 68 பேருக்கு இன்று நோய் பரவி உள்ளது. இது மிக அதிக எண்ணிக்கை ஆகும். இவர்களில் 15 பேருக்கு நோய் எப்படி பரவியது என தெரியவில்லை. இது மிகவும் கவலையளிக்கும் விஷயமாகும். எனவே தற்போது உள்ள கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .நோயை கட்டுப்படுத்த நாம் மேற்கொண்டு வரும் முகக் கவசம் அணிவது, கைகளை கழுவுவது மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை மேலும் கடுமையாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டால் தான் நோய் பரவலை நம்மால் தடுக்க முடியும்.  ஊரடங்கு சட்ட நிபந்தனைகளை தளர்த்தியதால் தான் நோய் பரவல் தற்போது அதிகரித்துள்ளது. குறிப்பாக சில பகுதிகளில் நோய் வேகமாக பரவி வருகிறது. அதனால் தான் அந்த பகுதிகளில் மும்மடங்கு ஊரடங்கு உட்பட நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 63 பேர் மலப்புரம் மாவட்டத்தையும்,  54 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 29 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 21 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 19 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 18 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 15 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 13 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 12 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 11 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 10 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 3 பேர் கோட்டயம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், ஒருவர் இடுக்கி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் குணமடைந்தவர்களில் 23 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 20 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 19 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 10 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 9 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 6 பேர் கொல்லம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், தலா 3 பேர் திருவனந்தபுரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை 3,454 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 2,411 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் 1,86,576 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 3,034 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 378 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று புதிதாக 18 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 7,516 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் நோய் பரவல் அதிகரித்து வருவதால் தினசரி நடத்தப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 2,85,968 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் 5,456 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 62,367 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 60,165 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. ஊரடங்கு சட்டம் தொடங்கியதன் பின்னர் இதுவரை கேரளாவுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 4,99, 529 பேர் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 3,14,094 பேரும், வெளிநாடுகளில் இருந்து 1,85, 435 பேரும் வந்துள்ளனர். இவர்களில் 64.35 சதவீதம்  பேர் சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்துள்ளனர். தமிழ்நாட்டில் இருந்துதான் மிக அதிகமாக 97, 570 பேர் வந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து 88,031 பேரும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 47, 970 பேரும் வந்துள்ளனர்.  இதுவரை நோயின் தீவிரத்தை நம்மால் பெருமளவு கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் சிறிது கவனக்குறைவாக இருந்தாலும் கூட பெரும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே நகர்ப்பகுதிகளில் தான் மிக அதிகமாக நோய் பரவி வருகிறது. கேரளாவிலும் நகர பகுதிகளில் தான் நோய் அதிகளவில் பரவுகிறது. கேரளாவில் துணை ராணுவ படையினருக்கு நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. இதுவரை மத்திய தொழிற் பாதுகாப்பு படையை சேர்ந்த 66 பேருக்கும்,  23 ராணுவ வீரர்களுக்கும் நோய் பரவி உள்ளது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 தற்போது கேரளாவில் நோய் சமூக பரவல் ஏற்படவில்லை. ஆனாலும் சில பகுதிகளில் சில பிரச்சினைகள் இருக்கத் தான் செய்கிறது. அந்தப் பகுதிகளில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த விட்டால் சமூக பரவல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

date