Skip to main content

கேரளாவில் இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று,  தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் மரணம்: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

 

திருவனந்தபுரம்,

 

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 121 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 79 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 ஆம் தேதி மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மரணமடைந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த அரசாகரன் என்பவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 78 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 26 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 5 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று 3 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், 9 மத்திய தொழிற் பாதுகாப்பு படை காவலர்களுக்கும் நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 26 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 14 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 13 பேர் மலப்புரம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களையும், 12 பேர் பாலக்காடு மாவட்டத்தையும்,  11 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 9 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 5 பேர் ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களையும், தலா 4 பேர் காசர்கோடு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் குணமடைந்தவர்களில் 18 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 13 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா  8 பேர் கோட்டயம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், 7 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 5 பேர் திருச்சூர் மாவட்டத்தையும்,  4 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 3 பேர் திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களையும், 2  பேர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். கடந்த 24 மணி நேரத்தில் 5,244 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கேரளாவில் இதுவரை 4,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 2,057 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில்  1,80,617 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,662 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறி களுடன் 282 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,24,727 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மறு பரிசோதனை மற்றும் தனியார் பரிசோதனை கூடங்களில் 1,71,846 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 2,774 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 46,689 பேரிடம்  பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 45,065 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது 118 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. மலப்புரம் மாவட்டம் பொன்னானி தாலுகாவில் இன்று மாலை 5 மணி முதல் ஜூலை மாதம் 6 ஆம் தேதி நள்ளிரவு வரை மும்மடங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து யாரும் தேவையில்லாமல் வெளியே செல்லவோ அல்லது இப்பகுதிக்குள் நுழையவோ முடியாது. இங்கு வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வீடுகளில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கேரளாவில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை உலகமே உற்று நோக்குகிறது. நமது சிறப்பான பணியை பல்வேறு நாடுகள் பாராட்டியுள்ளன. கேரளாவில் இடது முன்னணி அரசு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. நமது அரசு பல்வேறு துறைகளில் பல சாதனைகளை புரிந்துள்ள போதிலும் தற்போதைய சூழ்நிலையில் இதை பறைசாற்றுவதற்காக எந்த விழாவும் நடத்த வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு வீடுகளில் சென்று சிகிச்சை அளிக்க வேண்டிய திட்டம் எதுவும் தற்போது இல்லை. கேரளாவில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளிலும் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டிய அனைத்து வசதிகளும் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

date