கேரளாவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று, 87 பேர் மருத்துவமனையில் சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 3 பேருக்கும், பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். 7 பேர் வெளிநாடுகளில் இருந்தும், தலா 2 பேர் மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த 4 பேர் இன்று குணமடைந்து தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 87 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கேரளாவில் 497 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இதுவரை விமானங்கள் மூலம் 2,911 பேரும், கப்பல்கள் மூலம் 793 பேரும், சாலை வழியாக 50,320 பேரும், ரயில் மூலம் 1,021 பேரும் வந்துள்ளனர். இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 55,045 ஆகும். தற்போது கேரளாவின் பல்வேறு மாவட்டங்களிலாக 56,981 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 56,362 பேர் வீடுகளிலும், 619 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 182 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 43,669 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 41,814 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இது தவிர சுகாதாரத் துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் அதிகம் உள்ளவர்களில் 4,764 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 4,644 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. இன்று கேரளாவில் 6 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. காசர்கோடு மாவட்டத்தில் உள்ள நீலேஸ்வரம், காசர்கோடு, கள்ளார், இடுக்கி மாவட்டத்திலுள்ள வண்டன்மேடு, கருணாபுரம் மற்றும் வயநாடு மாவட்டத்தில் உள்ள தவிஞ்சால் ஆகியவை நோய் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- Log in to post comments