Skip to main content

கேரளாவில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று, மருத்துவமனையில் 1231 பேருக்கு சிகிச்சை: சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல் 

 

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 11 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 10 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 8 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், தலா 7 பேர் பத்தனம்திட்டா மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும்,  தலா 6 பேர் திருச்சூர், மலப்புரம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், தலா 5 பேர் கொல்லம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், எர்ணாகுளம் மாவட்டத்தை சேர்ந்த 4 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 2 பேருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 27 பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் இன்று 10 பேருக்கு நோய் பரவியுள்ளது.

இதில் 4 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 3 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 2 பேர் மலப்புரம் மாவட்டத்தையும் , ஒருவர் கண்ணூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஒரு சுகாதாரத்துறை பெண் ஊழியருக்கு இன்று நோய் பரவியுள்ளது. இன்று 34 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். திருவனந்தபுரம் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும், பத்தனம்திட்டா மாவட்டத்தை  சேர்ந்த 6 பேரும், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 4  பேரும், ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேரும், இடுக்கி மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் இன்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை கேரளாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 848 ஆக உயர்ந்துள்ளது. தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 1,231 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

 கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களிலாக  2,04,153 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,02,240 பேர் வீடுகளிலும், 1,913 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 269 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 3,813 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை 95, 397 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 90,662 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 22 ,855 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 21,230 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. 6,135 மறு பரிசோதனை உள்பட இதுவரை மொத்தம் 1,26,088 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட்டுள்ளன.  இன்று புதிதாக நோய் தீவிரம் உள்ள 10 பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 158 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

date