Skip to main content

கேரளாவில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை , 30 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை: முதல்வர் பினராய் விஜயன் 

 

திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் புதன்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று யாருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இன்று 7 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 6 பேர் கோட்டயம் மாவட்டத்தையும் ஒருவர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை 502 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது 30 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் 14, 670 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 14,402 பேர் வீடுகளிலும், 268 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 58 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 34, 599 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 34063 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. கேரளாவில் தற்போது 6 மாவட்டங்களில் மட்டும்தான் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இதில் கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோழிக்கோடு, மலப்புரம், திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், பத்தனம் திட்டா, ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் ஒருவரரும் இல்லை. பொது முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மலையாளிகள் நாளை முதல் கேரளாவுக்கு வர உள்ளனர். இது தொடர்பாக மத்திய உள்துறை கேரள அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளது. மத்திய சிவில் விமான போக்குவரத்து துறையின் விமானங்கள் மற்றும் பாதுகாப்புத் துறையின் கப்பல்களில் இவர்கள் வருகின்றனர். நாளை இரண்டு விமானங்கள் கேரளா வரும் என அறிவிப்பு வந்துள்ளது. அபுதாபியிலிருந்து கொச்சிக்கு ஒரு விமானமும், துபாயிலிருந்து கோழிக்கோட்டுக்கு இன்னொரு விமானமும் வருகிறது. இவ்வாறு வருபவர்களுக்கு பயணத்தின் முன்பே உரிய மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கேரள அரசு பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது . ஆனால் இது தொடர்பாக இதுவரை மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கேரளாவுக்கு திரும்பும் வெளிநாட்டை சேர்ந்த மலையாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை, தங்குமிடம் உள்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் ஒரு வாரம் அரசு ஏற்பாடு செய்யும் முகாம்களில் தனிமையில் இருக்க வேண்டும். 7 நாட்களுக்கு பின்னர் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். இந்த பரிசோதனையில் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். நோய் இல்லை என்றால் வீடுகளுக்கு சென்று மேலும் 7 நாட்கள் அவர்கள் தனிமையில் இருக்க வேண்டும். பொது முடக்கம் காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா இமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மாணவர்கள் சிக்கியுள்ளனர் . டெல்லி ஜாமியா மிலியா பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் வரும் 15ம் தேதிக்கு முன் விடுதியை காலி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த  மாநிலங்களில் 1,200 கேரள மாணவர்கள் உள்ளனர் . இவர்களை டெல்லியில் இருந்து அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை 6,802 மலையாளிகள் கேரளாவுக்கு வந்துள்ளனர். இதுவரை 2,03,189 பேர் கேரளா திரும்ப முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் 69, 108 பேர் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். 38,862 பேருக்கு இதுவரை பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இன்று வரை தமிழ்நாட்டில் இருந்து 4,298 பேரும், கர்நாடக மாநிலத்தில் இருந்து 2,120 பேரும் வந்துள்ளனர். வாளையார் சோதனை வழியாக 4,369 பேரும், மஞ்சேஸ்வரம் வழியாக 1637 பேரும் வந்துள்ளனர். இவர்களில் 576 பேர் பொது முடக்கம் காரணமாக வேலை பறி போனவர்கள் ஆவர். வெளிமாநிலத்தில் உள்ள சிவப்பு மண்டலத்திலிருந்து வருபவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் கேரளாவில் அரசின் தனிமை முகாம்களில் இருக்கவேண்டும். ஆனால் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் வீடுகளில் ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டும். கேரளாவில் வரும் 13ம் தேதி முதல் கள்ளுக்கடைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அரசு மதுக்கடைகளை திறப்பது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகியவற்றுக்கான நடத்தப்படாமல் உள்ள தேர்வுகள் மே 21 மற்றும் 29 இடையே நடத்த பொதுக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இவற்றுக்கான நடந்து முடிந்த தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி வரும் 13ம் தேதி தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

date