Skip to main content

கேரளாவில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை: முதல்வர் பினராய் விஜயன் எச்சரிக்கை 

 

 

திருவனந்தபுரம், 

கேரள முதல்வர் பினராய் விஜயன் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் வயநாடு மாவட்டத்தையும்,  4 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா 2 பேர் ஆலப்புழா மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் கொல்லம், பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 4 பேர் தமிழ்நாட்டில் இருந்தும், 2 பேர் மும்பையில் இருந்தும் வந்துள்ளனர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 3 பேருக்கு நோய் பரவியுள்ளது. இன்று கேரளாவில் யாரும் நோயிலிருந்து குணமடையவில்லை. கேரளாவில் இதுவரை 576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 80 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களி்லாக 48,825 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அவர்களில் 48,287 பேர் வீடுகளிலும், 538 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 122 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மலப்புரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 36 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோட்டில் 17 பேரும், காசர்கோட்டில் 16 பேரும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  வயநாடு மாவட்டத்தில் தான் அதிகமாக 19 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42, 201 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 40,631 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. சுகாதாரத் துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 4630 பேரின் உமிழ்நீர்  மாதிரி பரிசோதித்ததில் 4,424 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் தற்போது நோய் தீவிரம் உள்ள 16 பகுதிகள் உள்ளன. இதுவரை நோய் பாதிக்கப்பட்ட 576 பேரில் வெளிநாடுகளிலிருந்து வந்த 311 பேருக்கு நோய் பரவியுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து வந்த 70 பேருக்கும், கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 187 பேருக்கும் நோய் பரவியுள்ளது. இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களில் 8 பேர் வெளிநாட்டினர் ஆவர். கேரளாவில் தற்போது மீண்டும் நோய் பரவுவது கவலையளிக்கிறது. கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருப்பதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் பரவுவது ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இதுவரை நாம் மேற்கொண்ட தடுப்பு நதவடிக்கைகளை இனியும் தொடர வேண்டும். சமூக விலகல் உள்பட பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டள்ளவர்கள் எந்த காரணம் கொண்டும் வெளியே வரக்கூடாது. அவ்வாறு வெளியே வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் தனிமையில் இருப்பவர்களை கண்காணிக்க போலீசார் பைக் மூலம் ரோந்து செல்வார்கள். தனிமையில் இருப்பவர்களின் வீடுகளுக்கு சென்று விசாரிக்கவும், அந்த நபர்களை கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது அரசு அலுவலங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை தொடர வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரத்தை போலவே வரும் ஞாயிற்றுக் கிழமையும் கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக இதுவரை 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் 53 வழக்குகளும், காசர்கோட்டில் 11 வழக்குகளும், கோழிக்கோட்டில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எல்லைகள் மற்றும் சோதனைச் சாவடிகளில்  போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் 4 சர்வதேச விமான நிலையங்கள் மூலம் 17 விமானங்களிலும், கொச்சிக்கு 3 கப்பல்கள் மூலமும் கேரளாவுக்கு  இதுவரை 3,732 பேர் வந்துள்ளனர். கேரளாவில் இருந்து 29 ரயில்கள் மூலம் 33,000 வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களுடைய ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் வந்த தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டதால்அந்த கப்பலில் வந்த அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இன்று டெல்லியிலிருந்து கேரளா வந்த ரயிலில் 1,045 பேர்  வந்துள்ளனர். திருவனந்தபுரத்தில் 348 பேரும், எர்ணாகுளத்தில் 411 பேரும், கோழிக்கோட்டில் 286 பேரும் இறங்கினர். திருவனந்தபுரத்துக்கு வந்த ஒருவருக்கு நோய் அறிகுறி தென்பட்டதால் அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல கோழிக்கோடு வந்த 7 பேருக்கு கொரோனாஅறிகுறி தென்பட்டதால் அவர்களும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து கேரளா வர இதுவரை 2,85,880 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதுவரை 1, 23,972 பேர் பாஸ் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இதுவரை 47, 151 பேர் கேரளாவுக்கு வந்துள்ளனர். ரயில்கள் மூலம் 4,694 பேர் வந்துள்ளனர். வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை வீடுகளில் தனிமைப்படுத்துவதில் கேரளாவில் எந்த குழப்பமும் இல்லை. கேரளாவில் வீடுகளில் தனிமைப்படுத்தப்படுவது வெற்றிகரமாக அமைந்துள்ளது. இது தான் கேரளாவில் நோயை கட்டுப்படுத்துவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. கேரளாவில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள  கடும் நிபந்தனைகள் தொடரும். இந்த பகுதிகளிலிருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதி கிடையாது. இஸ்ரேலில் சிக்கியுள்ள 83 கேரள நர்சுகளை இந்தியா கொண்டுவர மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள மாணவர்களை அழைத்து வர சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 8 மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு விரைவில் ரயில்கள் இயக்கப்படும்.  இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. சிறிய துணிக்கடைகளை திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை 15 சதவீதம் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் ஏதாவது குழப்பம் இருக்கிறதா என்பது குறித்து ஆராயப்படும். கேரளாவில் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறந்து தூய்மைப்படுத்த  அனுமதி அளிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

date