கேரளாவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று, மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி: கேரள முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் திங்கட்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 21 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 7 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் ஒருவருக்கு நோய் பரவியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் சுகாதாரத் துறை ஊழியர் ஆவார். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த 6 பேரும், திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், திருவனந்தபுரம் மற்றும் கண்ணூர்ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 3 பேரும், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேரும், எர்ணாகுளம் பாலக்காடு மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இதுவரை கேரளாவில் நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 630 ஆகும். தற்போது 130 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 67,789 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.இவர்களில் 67,316 பேர் வீடுகளிலும், 473 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 127 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 45, 905 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 44, 651 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 5,154 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 5082 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. தற்போது கேரளாவில் 29 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. மே 31ம் தேதி வரை மத்திய அரசு பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது. இதன்படி கேரளாவில் பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் செயல்படாது. பயிற்சி மையங்களும் அனுமதிக்கப்படமாட்டாது. ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வி ஊக்குவிக்கப்படும். நிபந்தனைகளுடன் மாவட்டங்களுக்குள் பஸ் போக்குவரத்து அனுமதிக்கப்படும். ஆனால் பஸ்களில் 50 சதவீதம் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை . மாவட்டங்களுக்குள் தனியார் வாகன போக்குவரத்து அனுமதி அளிக்கப்படும். மாவட்டத்தை விட்டு வெளியே செல்லவும் அனுமதி உண்டு. அதற்கு பாஸ் தேவையில்லை. ஆனால் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை மட்டுமே மாவட்டம் விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியை விட்டு வெளியே செல்லவோ, வெளியிலிருந்து அந்த பகுதிகளுக்கு செல்லவோ அனுமதி இல்லை. பஸ்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பயணிகள் அனுமதிக்கப்படுவதால் 50 சதவீதம் கட்டணத்தை உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது . படகுகளில் 33 சதவீத கட்டண உயர்வு அமல் படுத்தப்படும். இந்த கட்டண உயர்வு கொரோனா காலத்திற்காக மட்டுமே வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் நிபந்தனைகள் முழுமையாக தளர்த்தப்படும் போது பழைய கட்டணமே வசூலிக்கப்படும். பொது முடக்கம் காரணமாக இதுவரை அரசு அலுவலகத்தில் ஆஜராக முடியாத ஊழியர்கள் 2 நாட்களுக்குள் பணிக்கு ஆஜராக வேண்டும். அரசு அலுவலங்களில் அனைத்து துறைகளையும் சேர்ந்த 50 சதவீத ஊழியர்கள் கண்டிப்பாக பணிக்கு வரவேண்டும். மற்றவர்கள் வீடுகளிலிருந்து பணிகளை மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்குள் ஆட்டோ மற்றும் டாக்சி செயல்பட அனுமதிக்கப்படும். ஆட்டோக்களில் டிரைவர் தவிர ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் என்றால் மூன்று பேர் பயணம் செய்யலாம். இதேபோல டாக்சி களிலும் டிரைவர் தவிர ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம். குடும்ப உறுப்பினர்கள் என்றால் மூன்று பேர் பயணம் செய்யலாம். மால்கள் செயல்பட அனுமதி இல்லை. ஆனால் வணிக வளாகங்களில் உள்ள 50 சதவீத கடைகளை வாரத்தில் ஒருநாள் திறக்க அனுமதிக்கப்படும். எந்த நாள், எந்த கடைகளை திறப்பது என்பது குறித்து அந்தந்த உள்ளாட்சி அமைப்பினருடன் ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருசக்கர வாகனங்களில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் குடும்ப உறுப்பினர் என்றால் 2 பேர் பயணம் செய்யலாம். சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கலாம். இங்கு ஒரே சமயத்தில் இரண்டு பேர் மட்டுமே காத்திருக்கவேண்டும். ஏசி பயன்படுத்தக்கூடாது. சலூன் கடைகளில் முடிவெட்ட மற்றும் ஷேவிங் செய்ய மட்டுமே அனுமதி உண்டு. ஒருவருக்கு பயன்படுத்திய டவலை மற்றவர்களுக்கு பயன்படுத்தக்கூடாது. முடிந்தால் வாடிக்கையாளர்களே டவல்களை கொண்டு செல்லலாம். மதுக்கடைகளில் மது வாங்குவதற்கு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட
உள்ளது. இந்த செயலி செயல்பாட்டுக்கு வந்தவுடன் மதுக்கடைகளில் மது விற்பனை செய்யப்படும். பார்களில் மதுவுடன் உணவு வழங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படும். கள்ளுக் கடைகளில் கள்ளுடன் உணவும் பார்சலாக வழங்கலாம். கிளப்புகளில் உறுப்பினருக்கு மட்டும் மது மற்றும் உணவை பார்சலாக வாங்கிக் கொள்ளலாம். இனி ஒரு உத்தரவு வரும் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும். இதேபோல இனி ஒரு உத்தரவு வரும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments