கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . 5 பேர் இன்று நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 7 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 4 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 3 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 2 பேர் பத்தனம்திட்டா திருவனந்தபுரம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் காசர்கோடு, கோழிக்கோடு, எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் குணமடைந்தவர்களில் 2 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா ஒருவர் கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 8 பேர் மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்தும், 3 பேர் தமிழ்நாட்டிலிருந்தும் வந்தவர்கள் ஆவர். கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது.
கேரளாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 666 ஆகும். தற்போது 161 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தற்போது கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 74,398 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 73,865 பேர் வீடுகளிலும், 533 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 155 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 48, 543 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 46,961 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதார துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் கொண்ட 6090 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 5,728 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று நோய் தீவிரம் உள்ள பகுதிகள் பட்டியலில் புதிதாக எந்த பகுதியும் சேர்க்கப்படவில்லை. கேரளாவில் நோய் பரவல் ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று நான் ஏற்கனவே கூறியிருந்தேன்.
பொதுமுடக்ககத்தில் சில நிபந்தனைகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டன. ஆனால் சில துறைகளில் நிபந்தனைகளை கடுமையாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து நமது சகோதர, சகோதரிகள் கேரளாவுக்கு வரத் தொடங்கிய பின்னர்தான் இங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. மே 7ம் தேதி கேரளாவுக்கு வெளிநாட்டில் இருந்து முதல் விமானம் வந்தது. மே 1,3,4, 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் கேரளாவில் புதிதாக யாரும் கொரோனா நோயால் பாதிக்கப்படவில்லை என்ற நிலை இருந்தது. 8ம் தேதி ஒருவருக்கு மட்டுமே நோய் பாதிப்பு ஏற்பட்டது. அன்று 16 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தனர். மே 13ம் தேதி முதல் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அன்று 10 பேருக்கும் 14ம் தேதி 26 பேருக்கும், 15ம் தேதி 16 பேருக்கும், 16ம் தேதி 11 பேருக்கும், 17ம் தேதி 14 பேருக்கும், 18ம் தேதி 29 பேருக்கும், நேற்று 12 பேருக்கும், இன்று 24 பேருக்கும் புதிதாக நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்போது புதிய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடந்த 8ம் தேதி 16 பேர் நோயாளிகளாக இருந்த நிலையில் இன்று அது 161ஆக உயர்ந்துள்ளது. இதை மனதில் வைத்துதான் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நமது சகோதர சகோதரிகள் வருவதை எந்த காரணம் கொண்டும் தடுக்க முடியாது. அவர்கள் அவர்களது சொந்த மண்ணுக்கு வருகின்றனர். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டியது நமது கடமையாகும். அவர்கள்தான் நோயைப் பரப்புகின்றனர் என்ற தவறான கண்ணோட்டம் யாருக்கும் இருக்கக்கூடாது. ஆனாலும் வருபவர்களில் யாருக்கு நோய் இருக்கும், யாருக்கு நோய் இருக்காது என கண்டுபிடிப்பது சிரமமாகும். இதனால்தான் வளையார் உள்பட சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. அவர்களுக்கு கூடுதல் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டியது கட்டாயமாகிறது. கேரளாவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் டூ தேர்வுகள் திட்டமிட்டபடி மே 26ம் தேதி தொடங்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும். ஏற்கனவே இம்மாத இறுதியில் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. ஆனால் பொதுமுடக்கம் முடியாத நிலையிலும், கொரோனா பீதி குறையாததாலும் தேர்வுக்கு மாணவர்களால் வரமுடியாத நிலை உள்ளது என்று பெற்றோர்கள் சிலர் கவலை தெரிவித்ததனர். இதனால் தேர்வுகளை அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்க முன்னர் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் மீண்டும் அதே தேதியில் திட்டமிட்டபடி தேர்வை நடத்த முடிவு டெய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெற்றோர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. சுகாதாரத்துறையில் ஏற்கனவே 3,700 புதிய தற்காலிக பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்போது மீண்டும் 2948 தற்காலிக பணியிடங்களை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது மதுக்கடைகளை திறப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments