Skip to main content

கேரளாவில் இன்று 42 பேருக்கு கொரோனா தொற்று, 216 பேர் மருத்துவமனையில் சிகிச்சை: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

திருவனந்தபுரம், 

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: இன்று கேரளாவில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இருந்ததைவிட இன்று மிக அதிக எண்ணிக்கையில் நோய் பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று கேரளாவில் ஒரு மூதாட்டி கொரோனா பாதிக்கப்பட்டு இறந்துள்ளார். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 12 பேரும், காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும்,  கோழிக்கோடு மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 5 பேரும், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 4 பேரும்,  கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த 2 பேரும், கொல்லம்,  பத்தனம்திட்டா மற்றும் வயநாடு மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இன்று 2 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 21பேர் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்தும், தலா ஒருவர் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்த 17 பேருக்கும் இன்று நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. கண்ணூரில் ஒருவருக்கு கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. கோழிக்கோட்டில் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவருக்கும் நோய் பரவியுள்ளது. இதுவரை கேரளாவில் 732 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 216 பேர் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது 84, 258 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 83, 649 பேர் வீடுகளிலும், 609 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறியுடன் 162 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 51, 310 பேரின் உமிழ் நீர் மாதிரி பரிசோதித்ததில் 49,535 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் கொண்ட 7,07 2 பேரிடம் பரிசோதனை நடத்தியதில் 6,630 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. தற்போது கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தான் மிக அதிகமாக தலா 36 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலக்காடு மாவட்டத்தில் 26 பேரும், காசர்கோடு மாவட்டத்தில் 21 பேரும், கோழிக்கோடு மாவட்டத்தில் 19 பேரும், திருச்சூர் மாவட்டத்தில் 16 பேரும் சிகிச்சையில் உள்ளனர். தற்போது கேரளாவில் 28 ஹாட்ஸ்பாட் பகுதிகள் உள்ளன. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இதுவரை கேரளாவுக்கு 91,344 பேர் வந்துள்ளனர். வெளி மாநிலங்களிலிருந்து மட்டும் 82, 299 பேர் கேரளாவுக்கு வந்துள்ளனர். இதுவரை 43 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து 9,367 பேர் வந்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் 157 பேர் மருத்துவமனையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். தற்போது கேரளாவில் நோய் அதிகரித்து வருவது நமக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு முன்னெச்சரிக்கை ஆகும். எனவே கூடுதல் சிகிச்சை வசதிகளை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கேரளாவுக்கு வரவேண்டாம் என்று கூற முடியாது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன் இங்கு இருப்பவர்களுக்கும் உரிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கேரளாவின் தற்போது ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கின்றனர். இது தவறாகும். வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக தான் ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ள தவிர கொண்டாடுவதற்காக அல்ல . மேலும் பொது இடங்களில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளையும் அழைத்துச் செல்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். கேரளாவில் மீதமுள்ள பத்தாம் வகுப்பு,  பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வுகள் திட்டமிட்டபடி மே 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கேரள பொதுக் கல்வித் துறை செய்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களுக்கும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகளிலுள்ள  மாணவர்களுக்கும் தேர்வு எழுத சிறப்பு வசதி ஏற்படுத்தப்படும். தேர்வு மையங்களில் அனைத்து மாணவர்களுக்கும் உரிய பரிசோதனை நடத்திய பிறகே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக 5000 தெர்மல் ஸ்கேனர்கள் வாங்கப்பட்டுள்ளன. தேர்வு முடிந்தபின் விடைத்தாள்கள் 7 நாட்கள் தேர்வு மையங்களில் வைக்கப்பட்டிருக்கும்.  வளைகுடா நாடுகளில் தேர்வு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு முக கவசம் மற்றும் தேர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் அடங்கிய நோட்டீஸ்கள் மற்றும் முகக் கவசங்கள் மாணவர்களின் வீடுகளில் வழங்கப்படும். இதுவரை 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் தேர்வு மையங்களை மாற்றுவதற்கு விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 1ம் தேதி முதல் கல்லூரிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  வரும் ஞாயிற்றுக்கிழமை ரம்ஜான் பண்டிகை வந்தால் அன்று முழு ஊரடங்கில் நிபந்தனைகள் தளர்த்தப்படும். உள்நாட்டு விமானங்களில் கேரளாவுக்கு தங்குவதற்காக வருபவர்கள் கண்டிப்பாக 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

date