Skip to main content

கேரளாவில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு :முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

I&PRD KERALA 
TAMIL PRESS RELEASE
31-03-20 

----------------------

திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் செவ்வாயன்று நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் நோய்க்கு ஒருவர் மரணமடைந்துள்ளார். திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போத்தன்கோட்டை சேர்ந்த அப்துல் அசீஸ் என்பவர் மரணமடைந்துள்ளார். கேரளாவில் இன்று மேலும் 7 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 2 பேரும் கொல்லம், திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 215ஆக உயர்ந்துள்ளது.  தற்போது 1,63,129 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். 1,62,471 பேர் வீடுகளிலும், 658 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று 150 பேர் புதிதாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் உள்ள அனைவருக்கும் இலவச ரேசன் பொருள்  விநியோகம் நாளை (ஏப் ரல் 1) முதல் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கேரளாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் நடவடிக்கை: முதல்வர் விஜயன் தகவல்

 திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் செவ்வாயன்று நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இலவச ரேஷன் பொருள் வினியோகம் ஏப்ரல் 1 முதல் தொடங்கும். ரேசன் கடைகளில் நெரிசலை கட்டுப்படுத்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் 5 பேர் மட்டுமே கடையில் இருக்க வேண்டும். பொருட்களை வாங்குவதற்கு டோக்கன் வழங்கலாம். பொருட்களை வழங்குவதற்கு ரேசன் வியாபாரிகள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பதிவு செய்துள்ள சமூக ஆர்வலர்களின் உதவியை மட்டுமே நாட வேண்டும். நேரடியாக கடைக்கு வந்து ரேசன் பொருளை வாங்க முடியாதவர்களுக்கு வீடுகளில் பொருட்களை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் தனியாக வசிக்கும் மூத்தகுடிமக்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் கண்காணிப்பில் இருப்பவர்களின் வீடுகளில்  பொருட்களை கொண்டு  கொடுக்க தன்னார்வ தொண்டர்கள் முன்வரவேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள். கொள்ளை லாபம் அடிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சமையல் எரிவாயு விநியோகத்தில் இந்த தட்டுப்பாடும் இருக்காது. அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சமுதாய சமையலறை தொடங்கப்பட்டுள்ளன. வீடுகளில் தோட்டம் அமைப்பதற்காக 3 லட்சம் விதைகள் தயாராக உள்ளன. வெளிமாநில தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்துவதற்காக தொழிலாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு காவல்துறை சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டை மூலம் தொழில்துறை அறிவித்துள்ள 2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பாதுகாப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தவிர மற்ற சலுகைகளும் அவர்களுக்கு கிடைக்கும். முட்டாள்கள் தினமான ஏப்ரல் 1ம் தேதி தவறான வதந்திகளை பரப்பினால் அவரகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரிகளின் உடல் நலத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும். இதற்காக மொபைல் அப்ளிகேஷன் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வரின் நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வந்துகொண்டிருக்கின்றன. அமைச்சர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மட்டும ரூ. 5 கோடியே 9 லட்சத்து 61ஆயிரம் நன்கொடை கிடைத்துள்ளது. பல்வேறு தனியார் நிறுவனங்களும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் நோயாளிகள் அதிகமாக உள்ள காசர்கோடு மாவட்டத்தில் சிறப்பு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்படும். காசர்கோடு அரசு மருத்துவக் கல்லூரியில்  கொரோனா சிகிச்சை மையத்தின் செயல்பாடு விரைவில் தொடங்கும். காசர்கோடு மத்திய பல்கலைக்கழகத்தில் நோய் பரிசோதனை நடத்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி மைய கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் தான் கேரளாவில் மிக அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் கண்காணிப்பில் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 163 பேரும், கண்ணூரில் 108 பேரும் மலப்புரத்தில் 102 பேரும் கண்காணிப்பில் உள்ளனர். அனைத்து பரிசோதனை கூடங்களிலும் பரிசோதனைகளை விரைவாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் துறையினரின் பணி பெரிதும் பாராட்டத்தக்கது. டெல்லி நிஜாமுதீன் மற்றும் மலேசியாவில் நடந்த மத மாநாடுகளில் கலந்துகொண்டு திரும்பியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த மாநாடுகளில் பங்கெடுத்தவர்கள் பட்டியல் மாவட்ட கலெக்டர்கள் மூலம் அளிக்கப்பட்டு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

date