Skip to main content

கேரளாவில் இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ்,  இதுவரை குணமானவர்கள் 245 பேர் 

tamil press release

முதல்வர் பினராய் விஜயன் தகவல்

திருவனந்தபுரம்,திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் வியாழனன்று நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 7 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 2 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், ஒருவர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களின் ஐந்து பேர் துபாயில் இருந்து வந்தவர்கள் ஆவர். கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் மற்ற 2 பேருக்கு நோய் பரவியது. இன்று 27 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 24 பேர் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். எர்ணாகுளம்,  மலப்புரம் மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் குணமாகியுள்ளது. இதுவரை கேரளாவில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 394 ஆகும். இவர்களில்  245 பேர்  குணமடைந்துள்ளனர். தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவின் பல்வேறு பகுதிகளில் 88,855 பேர் கண்காணிப்பில் உள்ளனர் . இவர்களில் 88,332 பேர் வீடுகளிலும், 532 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். நோய் அறிகுறிகளுடன் இன்று 108 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா நோய் அறிகுறிகள் காணப்பட்ட 17,400 பேரின் உமிழ்நீர்  மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 16,489 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களை விட மூன்று மடங்கிற்கும் மேல் பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

***

பிற மாநில எல்லைகள் மே 3 வரை திறக்கப்பட மாட்டாது 
முதல்வர் பினராய் விஜயன் தகவல் 

திருவனந்தபுரம், 
முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் காசர்கோடு, கண்ணூர், எர்ணாகுளம், மலப்புரம், திருவனந்தபுரம் மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களை நோயின் தீவிரம் அதிகமுள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதில் சில மாற்றங்களை ஏற்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி தற்போதைய நிலவரப்படி 61 நோயாளிகள் உள்ள காசர்கோடு, 45 நோயாளிகள் உள்ள கண்ணூர் , தலா 9 நோயாளிகள் உள்ள மலப்புரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களை நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக அறிவிக்கப்படும்.  இந்த மாவட்டங்களில் மே 3ம்தேதி வரை ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல் படுத்தப்படும். இரண்டாவது பட்டியலில் 6 நோயாளிகள் உள்ள பத்தனம்திட்டா, 5 நோயாளிகள் உள்ள கொல்லம் மற்றும் மூன்று நோயாளிகள் உள்ள எர்ணாகுளம் ஆகிய மூன்று மாவட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 24ஆம் தேதி வரை கடும் நிபந்தனைகள் தொடரும். அதன்பின்னர் சூழ்நிலையைப் பொறுத்து நிபந்தனைகள் தளர்த்தப்படும். 3 நோயாளிகள் உள்ள ஆலப்புழா, தலா 2 நோயாளிகள் உள்ள திருவனந்தபுரம் மற்றும் பாலக்காடு, தலா ஒரு நோயாளி உள்ள திருச்சூர் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்கள் மூன்றாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பின்னர் ஊரடங்கு சட்டத்தில் நிபந்தனைகள் தளர்த்தப்படும். இங்கு அத்தியாவசிய கடைகள் மற்றும் ஓட்டல்கள் இரவு 7 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். தற்போது நோயாளிகள் இல்லாத கோட்டயம் மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்கள் நாலாவது பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் தமிழக எல்லை உள்ளது. எனவே மே 3-ம் தேதி வரை தமிழக எல்லை மூடப்பட்டிருக்கும். இதேபோல  மே 3-ஆம் தேதி வரை கேரளா முழுவதும் பிற மாநில எல்லைகள் அனைத்தும்  மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் 20ம் தேதிக்கு பின்னர் பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் மட்டுமே கடைகள் இயங்கும். இங்கு ஏசி பயன்படுத்தக்கூடாது, ஒரே சமயத்தில் இரண்டு பேருக்கு மேல் காத்திருக்க கூடாது. நோய் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் கட்டிட பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்படும். பணியில் 50 சதவீத தொழிலாளர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளி உள்பட அனைத்து நிபந்தனைகளையும் பின்பற்ற வேண்டும். ஏப்ரல் 20-ம் தேதிக்கு பின்னர் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க எண் கொண்ட வாகனங்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் அனுமதிக்கப்படும் நோய் குணமாகி வீட்டுக்கு சென்றாலும் அவர்கள் 14 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது நேற்று இங்கிலாந்தை சேர்ந்த 268 பேர் திருவனந்தபுரம் மற்றும் கொச்சியிலிருந்து இங்கிலாந்தின் சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு சென்றனர். இவர்களில் 7 பேர் நோயிலிருந்து குணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் கேரள அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

date