Skip to main content

கேரளாவில் இன்று 4 பேருக்கு கொரோனா, வெளிநாடுகளிலிருந்து கேரளா திரும்ப 2,76,000 பேர் முன்பதிவு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியது:  கேரளாவில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், ஒருவர் காசர்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 2 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர்.  

மற்ற 2 பேருக்கும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இன்று 4 பேர்  நோயிலிருந்து குணமாகி உள்ளனர். இவர்களில் தலா 2 பேர் கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை கேரளாவில் 485 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 123 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் 20,773 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 20,255 பேர் வீடுகளிலும், 518 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று 151 பேர் புதிதாக மருத்துவமனை சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 23, 980 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 23,227 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள், சமூக தொடர்பு அதிகமாக உள்ளவர்கள் ஆகியோர்களில் 875 பேரன் உமிழ் நீர் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 801 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. நேற்று 3101 மாதிரிகள் கேரளாவின் 14 பரிசோதனை கூடங்களில் பரிசோதிக்கப்பட்டது.

இதில் 2682 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. இதில் 3 பேருக்கு மட்டுமே நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இனியும் 391 பேரின் முடிவுகள் வர உள்ளன. 25 பேரின் முடிவுகள் மறு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காசர்கோடு மாவட்டத்தில் தான் இதுவரை மிக அதிகமாக 175 பேருக்கு நோய் உறுதி செய்யபட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் இதுவரை 89 நோயாளிகள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து திரும்பியுள்ளனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கடைசி நோயாளி் இன்று குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

இடுக்கி மாவட்டத்திலுள்ள கருணாபுரம், மூணாறு ஆகிய பஞ்சாயத்துகளும், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள மேலுகாவு பஞ்சாயத்து, சங்கனாசேரி நகரசபை, மலப்புரம் மாவட்டத்தில் காலடி, பாலக்காடு மாவட்டத்தில் ஆலத்தூர் பஞ்சாயத்து ஆகியவை நோய் தீவிரம் அதிகமுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. லாக் டவுன் முடிகின்ற மே 3ம் தேதிக்கு பின்னர் கேரளாவில் லாக் டவுன் நிபந்தனைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வரும் காலத்தில் முக கவசம் அணிவது நம் வாழ்க்கையில் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். பள்ளிகள் உள்பட மக்கள் கூடும் இடங்களில், பயணங்களில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். மாநில எல்லைகள் வழியாக பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமானோர் ஊடுருவி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே மாநில எல்லையில் போலீஸ், வனத்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் கூடுதல் பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். வெளிநாடுகளிலிருந்து கேரளா திரும்புபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் கேரளா திரும்ப ஏராளமானோர் காத்துக்கொண்டிருக்கின்றனர்.  இதுவரை 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2,76,000 பேர் கேரளா திரும்ப முன்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளன. கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கு அருகேயே தனிமையில் இருக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நோய் இல்லாதவர்கள் வீடுகளுக்கு சென்று தனிமையில் இருக்க வேண்டும். அவர்கள் வீடுகளுக்குத் தான் செல்கிறார்களா என்பதை சுகாதாரத்துறையில் கண்காணிப்பார்கள். நோய் அறிகுறி உள்ளவர்கள் விமான நிலையத்திற்கு அருகிலேயே அரசு ஏற்பாடு செய்துள்ள இடங்களில் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள். வெளிநாட்டில் உள்ள மலையாளிகளை விமானங்களில் கொண்டு வர முடியாவிட்டால் கப்பல்களில் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

date