கேரளாவில் சென்னை சென்று வந்த லாரி டிரைவர் குடும்பத்தினர் உட்பட 3 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் செவ்வாய்க்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை சென்று திரும்பிய வயநாடு மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த டிரைவரின் தாய், மனைவி மற்றும் லாரி கிளீனரின் மகன் ஆகியோருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் கடைபிடிக்கவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனக்குறைவாக இருந்தால் இதுபோன்ற ஆபத்துகள் ஏற்படும். இன்று நோயிலிருந்து யாரும் குணமடையவில்லை. இதுவரை கேரளாவில் 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 37 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 21,342 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 21,034 பேர் வீடுகளிலும், 308 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 86 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 33, 800 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 33,265 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது . இன்று மட்டும் 1024 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று நோய் தீவிரம் உள்ள பகுதிகள் எதுவும் கூடுதலாக சேர்க்கப்படவில்லை. கண்ணூர் மாவட்டத்தில் 18 பேரும் ,கோட்டயம் மாவட்டத்தில் 6 பேரும், வயநாடு மாவட்டத்தில் 4 பேரும், கொல்லம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேரும், பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர் . 4 மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாருமில்லை. வெளிநாடுகளில் இருந்து இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது . நாளை மறுநாள் முதல் கேரளாவிற்கு வெளிநாடுகளிலிருந்து பலரும் திரும்ப உள்ளனர். அடுத்த ஐந்து நாட்களில் 2280 பேர் கேரளா திரும்புகின்றனர். பல்வேறு நாடுகளில் இருந்து கேரளா திரும்ப விருப்பம் தெரிவித்து இதுவரை 4,42,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் முன்னுரிமை அடிப்படையில் 1,69,136 பேர் அடங்கிய பட்டியல் மத்திய அரசிடம் வழங்கப்பட்டது. ஆனால் அந்த பட்டியலை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. தற்போதைய கணக்கின்படி கேரளாவுக்கு 80,000 பேர் மட்டுமே வர முடியும் என்ற நிலை உள்ளது. விமானங்களில் அழைத்து வரும்போது அனைவருக்கும் சர்வதேச விதிகளின்படி கொரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும். ஆனால் தற்போது பரிசோதனை எதுவும் நடத்தாமல் அழைத்து வர மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இப்படி பரிசோதிக்காமல் அழைத்து வந்தால் இந்தியாவில் மேலும் கொரோனா பரவும் ஆபத்து உள்ளது. ஒரு விமானத்தில் குறைந்தது 200 பயணிகள் இருப்பார்கள். இவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தால் கூட அனைவருக்கும் பரவ வாய்ப்புள்ளது. எனவே உரிய பரிசோதனை நடத்திய பின்னரே ஆட்களை விமானத்தில் ஏற்ற வேண்டும் என்று கோரி பிரதமருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கேரளாவுக்கு வருபவர்கள் தற்போதைய சூழலில் ஒரு வாரம் அரசு முகாம்களில் தனிமைப்படுத்தப் படுவார்கள். பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். இந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என்று கண்டுபிடிக்கப் பட்டால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் வீடுகளிலும் மேலும் ஒரு வாரத்திற்கு தனிமையில் இருக்க வேண்டும் . பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமையில் தங்க வைப்பதற்காக கேரளா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையத்திற்கு அருகில் உள்ள முகாம்களில் மட்டுமல்லாமல் அவர்களது ஊருக்கு அருகில் உள்ள அரசு முகாம்களிலும் தங்கிக் கொள்ளலாம். இதற்காக கேரளா முழுவதும் இரண்டரை லட்சம் படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1, 63,000 படுக்கைகள் தங்குவதற்கு தயார் நிலையில் உள்ளன. மீதி படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படும். இதற்காக கேரளாவில் பல்வேறு பகுதிகளில் காலியாக கிடக்கும் வீடுகளும் பயன்படுத்தப்படும். மாலத்தீவு மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து ஆட்களை அழைத்து வர 3 கப்பல்கள் சென்றுள்ளன. இந்த கப்பல்கள் விரைவில் கொச்சி துறைமுகத்திற்கு வரும். துறைமுகத்தில் வருபவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இவர்களில் வெளி மாநிலங்களைச் சேர்ந்த யாராவது இருந்தால் அவர்களை அவர்களது மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இன்று மதியம் வரை பிற மாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு 3,363 மலையாளிகள் வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் உள்ள சிவப்பு மண்டலத்தில் இருந்து வருபவர்கள் கேரளாவில் கண்டிப்பாக ஒரு வாரம் அரசு முகாம்களில் தங்கி இருக்க வேண்டும். இவர் அவர் கூறினார்.
ReplyForward |
- Log in to post comments