கேரளாவில் இன்று ஒருவருக்கு கொரோனா, 16 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர்: முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று ஒருவருக்கு மட்டுமே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து எர்ணாகுளம் வந்த அவர் சிறுநீரக நோயாளி ஆவார். இன்று 10 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 16 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 503 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20,157 பேர் வீடுகள் மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் உள்ளனர். 19, 810 பேர் வீடுகளிலும், 347 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிப்பில் உள்ளனர். இதுவரை 35,856 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 35, 355 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ளவர்களில் 3380 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டதில் 2,939 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று கொரோனா அறிகுறிகளுடன் 127 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் 5 பேரும், வயநாடு மாவட்டத்தில் 4 பேரும், கொல்லம் மாவட்டத்தில் 3 பேரும், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதல் கொரோனா நோயாளி கண்டுபிடிக்கப்பட்டார். ஜனவரி 30-ஆம் தேதி சீனாவில் இருந்து வந்த மாணவிக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டு 100 நாள் ஆகிறது. இதன் பின்னர் அரசு எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக நோய் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. மார்ச் முதல் வாரத்தில் கேரளாவில் இரண்டாவது கட்டமாக நோய் பரவத்தொடங்கியது. இதற்கு பின்னர் மேற்கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக இரண்டு மாதங்கள் கழித்து நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளில் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நோய் தீவிரமாக பரவி வருகிறது. ஆனால் கேரளாவில் தீவிர நடவடிக்கை காரணமாக நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . இதனால்தான் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ள மலையாளிகள் கேரளாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். கேரளா திரும்பும் அனைவருக்கும் உரிய வசதிகள் அளிக்கப்படும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்காக கேரளா செய்துவரும் வசதிகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து செயலாளர் பாராட்டியுள்ளார். நேற்று 182 பயணிகளுடன் அபுதாபியில் இருந்து கொச்சிக்கு முதல் விமானம் வந்தது. இதில் 49 கர்ப்பிணிகளும், 4 கைகுழந்தைகளும் இருந்தனர். இந்த விமானத்தில் வந்த 5 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால் அவர்கள் கொச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்பின்னர் துபாயில் இருந்து கோழிக்கோட்டுக்கு 182 பயணிகளுடன் விமானம் வந்தது. இன்று ரியாத்தில் இருந்து 149 பயணிகளுடன் ஒரு சிறப்பு விமானம் வருகிறது. இதில் கேரளாவின் 13 மாவட்டங்களை சேர்ந்தவர்களும், கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேரும் உள்ளனர். இந்த விமானத்தில் 84 கர்ப்பிணிகளும், 22 குழந்தைகளும், அவசர சிகிச்சைக்கு வரும் 5 பேரும் உள்ளனர். 70 வயதுக்கு மேலான 3 பேரம் இந்த விமானத்தில் உள்ளனர். வரும் 10ம் தேதி
தோகாவில இருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு விமானம் வருகிறது. இதில் திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கொல்லம் , ஆலப்புழை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து கேரளாவுக்கு வர 86,679 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில் 37 ஆயிரத்து 701 பேர் சிவப்பு மண்டலத்தில் இருந்து வருகின்றனர். இதுவரை 45, 714 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 19,476 பேர் சிவப்பு மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதுவரை கேரளாவிற்கு 16,355 பேர் வந்துள்ளனர். இதில் 8,912 பேர் சிவப்பு மண்டலத்தை சேர்ந்தவர்கள் ஆவர். முறையான பாஸ் இல்லாதவர்கள் மற்றும் முன் பதிவு செய்யாதவர்கள், முழுவிவரங்களை தெரிவிக்காதவர்கள் யாரையும் கேரளாவில் அனுமதிக்க முடியாது. கடந்த 7ஆம் தேதி வரை 21 ரயில்களில் 24088 வெளிமாநில தொழிலாளர்கள் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் அவசர தேவைக்காக சுகாதாரத் துறையில் டாக்டர்கள், நர்சுகள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர். உள்ளூரில் சிறு தொலைவு பயணத்திற்கு ஆட்டோ பயனுள்ளதாக உள்ளது. எனவே ஆட்டோக்களை இயக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். சமூக ஓய்வூதியம் வாங்காதவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை விரைவில் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments