கேரளாவில் இன்று துபாய், அபுதாபியிலிருந்து வந்த 2 பேருக்கு கொரோனா: முதல்வர் பினராய் விஜயன் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள முதல்வர் பினராய் விஜயன் சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் தேதி துபாயில் இருந்து கோழிக்கோடு வந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவருக்கும், அபுதாபி- கொச்சி விமானத்தில் வந்த ஒருவருக்கும் இந்த நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்று இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு நோய் குணமாகி உள்ளது. இதுவரை கேரளாவில் 505 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 17 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 23, 930 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 23,596 பேர் வீடுகளிலும், 334 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 123 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 36, 648 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதிக்கப்பட்டதில் 36,002 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. சுகாதாரத்துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் அதிகமாக உள்ள 3,475 பேரின் உமிழ்நீர் மாதிரியை பரிசோதித்ததில் 3,231 பேருக்கு நோய் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் மலையாளிகளை கேரளாவுக்கு கொண்டு வரும் பொறுப்பு கேரள அரசுக்கு உள்ளது. இதனால் தான் பல்வேறு நாடுகளிலும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சிக்கியுள்ள மலையாளிகளை கேரளாவுக்கு கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கான விமான வசதி உட்பட வசதிகளை மத்திய அரசு கவனித்து வருகிறது. கேரளாக்கு வருபவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கேரள அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவர்களை கவனிக்க ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர்கள் தங்கி உள்ள முகாம்களில் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முகாம்களிலும் ஒரு டாக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் பணியில் உள்ளனர். அரசு முகாம்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்த பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 13 கோடியே 45 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களுக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க கேரளாவில் 207 அரசு மருத்துவமனைகளில் உரிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 125 தனியார் மருத்துவமனைகளும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் 27 மருத்துவமனைகளை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் கொரோனா மையங்களில் தனிமையில் உள்ளவர்கள் இ ஜாக்ரதா ஆப் பயன்படுத்தி டாக்டர்களை வீடியோகால் மூலம் தொடர்பு கொண்டு தேவையான மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். மேலும் டெலிமெடிசின் வசதியும் செய்யப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் முகாம்களில் இருப்பவர்களுக்கு தேவையான மருந்துகளை அவர்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று சுகாதாரத்துறையினர் வழங்குவார்கள். உலகின் எந்த நாட்டிலும் நோயின் தீவிரம் குறையவில்லை. கொரோனாவை கட்டுப் படுத்தினாலும் அது சில நாடுகளில் மீண்டும் பரவி வருவதாக கூறப்படுகிறது. எனவே கேரளாவிலும் நோய் மேலும் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 38 லட்சத்து 20 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 64 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். நமது நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று காலை நிலவரத்தின்படி 1,981 பேர் மரணமடைந்துள்ளனர். நமது அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நோயாளிகள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது. மரணம் 40ஐ தாண்டி உள்ளது. கர்நாடக மாநிலத்தில் 753 பேருக்கு நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் இதுவரை 753 பேருக்கு நோய் பரவி உள்ளது. இதுவரை 33 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையில்தான் நாம் கொரோனாவுக்கு எதிராக தீவிரமாக எடுத்து வருகிறோம். வெளிமாநிலத்தில் இருந்து கேரளா வருபவர்களுக்கு பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த மாநிலத்தில் இருந்து வருகிறார்களோ அங்கிருந்து கண்டிப்பாக பாஸ் வாங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் பாஸ் இல்லாதவர்கள் கேரளாவுக்குள் அனுமதிக்க முடியாது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் மலையாளிகள் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் உட்பட முழு விபரங்களும் கேரள அரசுக்கு கிடைக்க வேண்டும். உரிய பாஸ் இல்லாமல் வந்தால் அவர்கள் திரும்பிச் செல்வதை தவிர வேறு வழியில்லை. இன்று மதியம் வரை கேரளாவுக்கு வெளிமாநிலங்களில் இருந்து 21, 812 பேர் வந்துள்ளனர். இதுவரை 54,262 பேருக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர் ஆகிய இடங்களில் உள்ள மலையாளிளுக்கு உதவுவதற்காக அங்கு உதவி மையங்கள் மற்றும் கால் சென்டர்கள் திறக்கப்படும். இந்த பகுதிகளில் இருந்து மலையாளிகளை அழைத்து வர விரைவில் சிறப்பு ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் பெங்களூருவில் இருப்பவர்களை கேரள அரசு பஸ்களில் கொண்டுவரலாமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலங்களிலிருந்து வந்து வீடுகளில் தனிமையில் உள்ள கர்ப்பிணிகள் தங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டால் இந்த சமயத்தில் உடனடியாக சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொள்ள வேண்டும். தங்களது விருப்பப்படி மருத்துவமனைக்கு செல்ல முடியாது. கேரளாவில் நாளை முழு ஊரடங்கு ஆகும். அத்தியாவசிய சேவை, பால், மருத்துவமனை, பரிசோதனைக் கூடங்கள், மருந்து கடைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இதில் விலக்கு அளிக்கப்படும். ஓட்டல்களில் பார்சல் கொடுக்கலாம். நாளை அன்னையர் தினமாகும். தங்களது குழந்தைகள் மகிழ்ச்சியாகவும், நலமுடனும் இருக்க வேண்டுமென்று தான் அன்னையர்கள் விரும்புவார்கள். கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் 10லிருந்து 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதன் தேசிய சராசரி 32 ஆகும். இந்த நிலையில் கேரளாவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முடிந்தது கேரள அரசின் சாதனை ஆகும்.ஐநா சபை கூட 2020இல் குழந்தைகள் இறப்பு விகிதத்தை 8ஆக குறைப்பது தான் லட்சியம் என்று தெரிவித்துள்ளது. கேரளாவில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 993 குழந்தைகள் நலமாக உள்ளனர். இதில் 7 குழந்தைகள் இறப்பதுவேதனையாகும். இறப்பு விகிதத்தை பூஜ்யமாக குறைக்க வேண்டும் என்பதே அரசின் லட்சியம் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.
- Log in to post comments