Skip to main content

கேரளாவில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

 

திருவனந்தபுரம்,

கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியது:  கேரளாவில் இன்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று யாரும் நோயிலிருந்து குணமடையவில்லை. இன்று நோய் பாதிக்கப்பட்டவர் களில் 5 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, ஆலப்புழா, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்ட அனைவரும் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். வெளிநாட்டில் இருந்து வந்த 4 பேருக்கும்,  மகராஷ்டிரா மாநிலத்திலிருந்து  வந்த 6 பேருக்கும், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலிருந்து வந்த தலா ஒருவருக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை  கேரளாவில் 642 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தற்போது 142 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களிலாக 72,000 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 71,545 பேர் வீடுகளிலும், 455 பேர் மருத்துவமனைகளிலும் கண்காணிபில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 119 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 46, 958 பேரிடம் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 45,527 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பானூர், சொக்லி, மய்யில்  மற்றும் கோட்டயம் மாவட்டத்திலுள்ள கோருத்தோடு ஆகிய இடங்கள் நோய் தீவிர பகுதிக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. கேரளாவில் இதுவரை சமூக பரவல் ஏற்படவில்லை. சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக வயதானவர்கள், நோய் எளிதில் பரவக்கூடியவர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 5,630 பேரிடம்  பரிசோதனை நடத்தியதில் 4 பேருக்கு மட்டுமே நோய் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் மூலம் கேரளாவில் சமூக பரவல் இல்லை என்பது உறுதியாகிறது. இதுவரை கேரளாவுக்கு விமானம், கப்பல் மற்றும் சாலை வழியாக 74,426 பேர் வந்துள்ளனர். இவர்களில் 44,712 பேர் சிவப்பு மண்டலம் அமைந்துள்ள மாவட்டங்களிலிருந்து வந்துள்ளனர். சாலை வழியாக இதுவரை கேரளாவிற்கு 63,239 பேர் வந்துள்ளனர். சாலை வழியாக வந்தவர்களில் 46 பேருக்கும், விமானம் மூலம் வந்தவர்களில் 53 பேருக்கும், கப்பல் மூலம் வந்தவர்களில் 6 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பொது முடக்கம் அமலில் உள்ள இந்த நேரத்தில் சில டியூஷன் சென்டர்கள் செயல்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இதை அனுமதிக்க முடியாது. பள்ளிகள் திறக்கும் போதுதான் டியூஷன் சென்டர்களும் செயல்படவேண்டும். ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்துவதில் தவறில்லை. தற்போது தனியார் மருத்துவமனைகளில் நெரிசல் அதிகரித்து வருகிறது.  மருத்துவமனைகளில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.  பல ரோட்டோர கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடுவதாக கூறப்படுகிறது. இதை அனுமதிக்க கூடாது. ஓட்டல்களில் பார்சல் வழங்க மட்டுமே அனுமதி உண்டு. ஒன்றுக்கு மேல் மாடி கொண்ட துணிக்கடைகள் மற்றும் மொத்த துணிக்கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்படும். போட்டோ ஸ்டூடியோக்களை திறக்கலாம்.  கடைகள் ம்ஸ்6 பொது இடங்களில் 10 வயதுக்கு குறைவான குழந்தைகளை எந்த காரணம் கொண்டும் அழைத்து செல்ல கூடாது. கேரளாவில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் திட்டமிட்டபடி இம்மாத இறுதியில் நடைபெறும். வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் சிக்கியுள்ள  மாணவர்கள் கேட்டுக் கொண்டால் அவர்களுக்கு தேர்வு எழுத உரிய வசதி ஏற்படுத்தப்படும்.

ஜூலை 26ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. வளைகுடா நாடுகளில் உள்ள கேரளாவை சேர்ந்த மாணவர்களும் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தற்போது பொதுமுடக்கத்தில் ஏராளமான மாணவர்கள் கேரளாவுக்கு தேர்வு எழுத வரமுடியாமல் அங்கேயே சிக்கியுள்ளனர். எனவே வளைகுடா நாடுகளில் நீட்  தேர்வு மையம் அமைக்க வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு கேரளாவுக்கு ஏசி இல்லாத  சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை மறுநாள் முதல் தினமும் பெங்களூருவிலிருந்து கேரளாவுக்கு ஏசி இல்லாத சேர் கார் ரயில் இயக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

date