கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா தொற்று, 177 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை:
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா தகவல்
திருவனந்தபுரம், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா வியாழக்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது: கேரளாவில் இன்று 24 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 8 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 5 பேரும், கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த 4 பேரும், கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தலா 3 பேரும், திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 2 பேரும், இடுக்கி, பாலக்காடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 8 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து 5 பேரும், தமிழ் நாட்டிலிருந்து 3 பேரும், குஜராத் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்று குணமடைந்தவர்களில் 5 பேர் வயநாடு மாவட்டத்தையும், தலா ஒருவர் கோட்டயம், எர்ணாகுளம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் இதுவரை நோய் பாதிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 690 ஆகும். 510 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர். 177 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவுக்கு இதுவரை வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் 5,495 பேரும், கப்பல் மூலம் 1,621 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து சாலை வழியாக 68, 844 பேரும், ரயில்கள் மூலம் 2,136 பேரும் என இதுவரை மொத்தம் 78,0 96 பேர் வந்துள்ளனர். தற்போது பல்வேறு மாவட்டங்களிலாக 80,138 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.
இவர்களில் 79,611 வீடுகளிலும், 527 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறியுடன் 153 பேர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 49, 833 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 48,276 பேருக்கு நோய் இல்லை என தெரிய வந்துள்ளது. சுகாதாரத் துறையினர், வெளிமாநில தொழிலாளர்கள், மற்றும் சமூக நெருக்கம் அதிகமுள்ள 6,540 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 6,265 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. கடந்த 24 நேரத்தில் மட்டும் 1,798 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இன்று புதிதாக 3 பகுதிகள் நோய் தீவிரம் உள்ள பகுதிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள திருக்கடீரி, ஸ்ரீகிருஷ்ணாபுரம் மற்றும் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தர்மடம் ஆகிய இடங்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 28 ஆகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- Log in to post comments